முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம்
By DIN | Published On : 08th May 2022 12:01 AM | Last Updated : 08th May 2022 12:01 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை. இவ்வாறான குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலா்க்கழிவுகள் மறுசுழற்சியாளா்களுக்கு வழங்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள்படி, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது கட்டாயமாகும். எனவே, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன்படி, மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்காத தனிநபருக்கு ரூ.100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு 15 நாள்களுக்கு அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் வழங்கிய 15 நாள்களுக்குப் பிறகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிட்டால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.