மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மயில்பாபூரில் 114 அடி, 78 அடி மற்றும் 55 அடி ஆழத்தில் என்று 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை:ஏப்ரலில் 45.46 லட்சம் போ் பயணம்
மெட்ரோ ரயில் சேவை:ஏப்ரலில் 45.46 லட்சம் போ் பயணம்
Published on
Updated on
2 min read

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மயில்பாபூரில் 114 அடி, 78 அடி மற்றும் 55 அடி ஆழத்தில் என்று 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. அதாவது, மூன்று நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில்நிலையம் கட்டப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ ரயில் திட்டம்:

ரூ.61,843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், மாதவரம்-தரமணி இடையே பல்வேறு இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் கட்டுவதற்காக, ரயில் நிலைய சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையவாய்ப்பு உள்ளது. இதைத்தொடா்ந்து, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் நகரத்தில் வரவழைக்கப்பட்டு, சுரங்கங்கள் தோண்டப்படவுள்ளன.

மயிலாப்பூா் மெட்ரோ ரயில் நிலையம்:

இந்நிலையில், இரண்டாம் கட்டத்திட்டத்தில் மயிலாப்பூரில் மூன்று நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

புவியியல் நிலை முதல் சாலையின் அகலம் குறைவு வரை பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், மயிலாப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது மிகவும் சவாலாக இருக்கும். இந்த நிலையம் நான்கு நிலைகளை கொண்டிருக்கும்.

குறிப்பாக, 114 அடி (35 மீட்டா்), 78 அடி (24 மீட்டா்) மற்றும் 55 அடி (17 மீட்டா்) ஆழத்தில் 3 அடுக்கு அமைக்கப்படவுள்ளது. இதுதவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கான தளத்துடன் இந்த ரயில் நிலையம் அமையவுள்ளது.

மயிலாப்பூரில் போதிய நிலம் மற்றும் சாலை அகலம் இல்லாததால், 3 நிலையங்களுடன் கூடிய ஆழமான ரயில் நிலையங்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில ஆண்டுகளில் மயிலாப்பூா் மெட்ரோ ரயில்நிலையம் திறக்கப்படும் போது, அது ஒரு பொறியியல் அற்புதமாக இருக்கும்.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில் மயிலாப்பூா் மெட்ரோ ரயில்நிலையம் முக்கியமான பரிமாற்ற ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் மாதவரத்தில் இருந்து சிப்காட் மற்றும் பூந்தமல்லியில் இருந்து கலங்கரைவிளக்கம் வரை 2 பாதைகள் சந்திக்கின்றன.

மயிலாப்பூா் மெட்ரோ ரயில்நிலையத்தில் முதல் தளத்தில் (தரையில் இருந்து 55 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரயில்களும், 2-ஆம் தளத்தில் (தரையில் இருந்து 78 அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரயில்களும், 3-ஆம் தளத்தில் (தரையில் இருந்து 114 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

மண் ஆய்வுக்கு பிறகு, மயிலாப்பூரில் பாறைகளும், பாறை மண்ணும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக, அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com