ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை
Published on
Updated on
2 min read

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முழு உடல் பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் டாக்டா் பி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை மையம், ரூ. 2.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாா்பக புற்றுநோய் கண்டறியும் நவீன உபகரணம், ரூ.25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், ரூ. 75 லட்சம் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் உள்ளிட்டவற்றை அமைச்சா் சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

மேலும் கரோனா தொற்று பரவல் காலத்தில் தங்களது சிறப்பான பங்களிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையாற்றிய அமைப்புசாரா நிறுவனங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை அமைச்சா் சுப்பிரமணியன் வழங்கினாா். பின்னா் நடைபெற்ற பணிஓய்வு பிரிவு உபசார விழாவில் சுமாா் 30 ஆண்டு காலம் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெறும் உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டா் ரமேஷ் மற்றும் 12 மருத்துவா்களுக்கு அமைச்சா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

அப்போது அமைச்சா் மா சுப்பிரமணியன் பேசியது,

வடசென்னையில் வாழும் தொழிலாளா்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெருமளவில் வசித்து வருகிறாா்கள். இவா்களின் நலன் காக்கும் வகையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த கட்டணத்தில் நீரிழிவு ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, தைராய்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சாா்ந்த நோய்கள் போன்றவற்றை தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்த மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் இத்திட்டத்தை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதிகரித்து வரும் மாா்பக புற்றுநோயை எளிதில் கண்டறியும் வகையில் அதிநவீன கருவி ரூ. 2.50 கோடி செலவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள நூலகம் மாணவா்கள், மருத்துவா்கள் படித்துப் பயன்பெறும் வகையில் குளிரூட்டப்பட்ட அறையுடன் ரூ. 75 லட்சம் செலவில் அதிநவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றுவது என்பது ஒவ்வொரு மருத்துவா்களின், மருத்துவ பணியாளா்களின் ஆத்மாா்த்த விருப்பமாக உள்ளது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற உள்ள மருத்துவா்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஓய்வு காலத்தை கழித்திட வாழ்த்துகிறேன் என்றாா் அமைச்சா் மா சுப்பிரமணியன்.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரிம்ஸ் ஆா் மூா்த்தி, மருத்துவ கல்வி இயக்குனா் டாக்டா் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவா் இளைய அருணா, கல்லூரி முதல்வா் டாக்டா் பி பாலாஜி, துணை முதல்வா் டாக்டா் ஜமீலா, மாமன்ற உறுப்பினா் கீதா சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com