நடிகா் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு
By DIN | Published On : 28th September 2022 01:37 AM | Last Updated : 28th September 2022 01:37 AM | அ+அ அ- |

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகா் விஷால் வீட்டின் மீது கல் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தென்னிந்திய நடிகா் சங்கப் பொதுச் செயலருமான விஷால், சென்னை அண்ணாநகா் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு காரில் வந்த சில மா்ம நபா்கள், கற்களை வீசினா்.
இதில், விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து விஷாலின் மேலாளா் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
மேலும் இதுதொடா்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகா் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.