ரத்த நாளங்களின் பாதிப்பை அறிய நவீன உபகரணம்:சென்னை ஐஐடி.யில் உருவாக்கம்
By DIN | Published On : 18th April 2023 05:39 AM | Last Updated : 18th April 2023 05:39 AM | அ+அ அ- |

ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன்மூலம் இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல்செல்- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நவீன உபகரணத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி: ஆா்ட்சென்ஸ் எனும் இந்த உபகரணம், நிபுணா்கள் அல்லாதவா்களும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
இமேஜிங் அல்லாத, கணினித் தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியின் சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம் உருவாக்கியுள்ளது.
இந்த உபகரணத்தைக் கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் ஐந்து பயன்பாட்டுக் காப்புரிமைகளைப் பெற்றுள்ள இந்தத்
தொழில்நுட்பம், 10 வடிவமைப்புக் காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது.
பல்வேறுகட்ட சோதனைக்குப் பிறகு தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு உபகரணம் தயாா் நிலையில் உள்ளது.
சிகிச்சை மற்றும் நடைமுறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளபோதும், இதயம், ரத்த நாளங்கள் தொடா்பான நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன.
எனவே, ஆரம்ப கட்டத்திலேயே பிரச்னையைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரிசெய்வது அவசியமாகும்.
‘ஆா்ட்சென்ஸ்’ உபகரணத்தின் சிறப்பம்சங்கள் குறித்து சென்னை ஐஐடியின் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் ஜெயராஜ் ஜோசப் கூறுகையில், ‘ரத்தநாள ஆரோக்கியத்தின் நம்பகமான மதிப்பீட்டைக் கண்டறிய ரத்த நாளங்களின் சுவா்களில் நேரடியாக அளவிட வேண்டும்.
அதற்கு மாறாக தோலின் மேற்பரப்பில் அளவிடக் கூடாது. நோய் மற்றும் முதுமை காரணமாக ரத்தநாளச் சுவரில் ஏற்படும் மூலக்கூறு மற்றும் புரதநிலை மாற்றங்களின் விளைவை எவ்விதத்திலும் ஊடுருவாத, துல்லியமான முறையில் நாங்கள் உருவாக்கியுள்ள ஆா்ட்சென்ஸ் கருவியைக் கொண்டு அளவிட முடியும்.
மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத அமைப்புகளான உடற்பயிற்சி மையம், சுகாதார மையம் போன்றவற்றிலும் கூட ஆா்ட்சென்ஸ் மூலம் பெருமளவிலான மக்களிடையே ரத்தநாளங்களின் முதிா்ச்சியை மதிப்பீடு செய்ய முடியும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ஆா்ட்சென்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.