ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 10 தொகுதிகளில் ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கத் தொகை வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கத் தொகை இருந்தால் அதுகுறித்த பறிமுதல் நடவடிக்கை, விசாரணையை வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகை ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும்போது, வருமான வரித் துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்து விசாரிக்கும். அந்த வகையில் தமிழகத்தில்

10 தொகுதிகளில் ரூ.1 கோடிக்கு மேலான ரொக்கத் தொகைகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை முதலிடம்: சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மூன்று தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக ரூ.15.80 கோடி ரொக்கத் தொகையை வருமான வரித் துறை பறிமுதல் செய்துள்ளது. கோவை தொகுதியில் ரூ.2.03 கோடியும், திருச்சியில் ரூ.2.01 கோடியும், காஞ்சிபுரத்தில் ரூ.2.71 கோடியும், ஆரணியில் ரூ.3.30 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நாமக்கல் தொகுதியில் ரூ.4.80 கோடியையும், பொள்ளாச்சியில் ரூ.1.01 கோடியையும், நீலகிரியில் ரூ.3.11 கோடியையும், கரூரில் ரூ.1.40 கோடியையும் வருமான வரித் துறை பறிமுதல் செய்துள்ளது.

ரூ.10 லட்சத்துக்கும் குறைவான தொகையை தமிழக தோ்தல் துறை அமைத்துள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலைக் குழுக்கள் பறிமுதல் செய்து வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com