பேராசிரியை நிா்மலா தேவி
வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிா்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீா்ப்பை ஏப். 26-ஆம் தேதிக்கு கீழமை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என்று தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக 2018-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிா்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் கணேசன் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நிா்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, தீா்ப்பை ஏப். 26-ஆம் தேதிக்கு கீழமை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது. ஏதேனும் புகாா் அளிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி, அது தொடா்பான விவரங்களை தெரிவிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com