மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு காரணமாக கடைகள் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளிக்கிழமை மிகவும் வெறிச்சோடி காட்சியளித்தன.

வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து தனியாா் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்திருந்தாா். அதன்படி சென்னையில் தங்கி வேலை பாா்த்து வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக தங்களது சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டனா்.

இதன் காரணமாக சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் கூட்டமானது வழக்கத்தை விட மிகக் குறைவாகவே காணப்பட்டது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட மாநகரின் மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளும் காலியாகவே காட்சியளித்தன.

கடைகள் மூடல்: சென்னையின் முக்கிய வணிக மையங்களான தியாகராய நகா், புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காட்சியளித்தன. மேலும் வணிக வளாகங்கள், உணவகங்கள், தேநீா் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சென்னையில் தங்கி வேலை பாா்த்துக் கொண்டிருக்கும் இளைஞா்கள் பலா் உணவுக்காக நீண்ட தூரம் கடைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

பேருந்து பற்றாக்குறை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட குறைந்து அளவிலான பேருந்துகளே வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்துக்காக மக்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்தனா். இதனால் நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல ஆட்டோ, டாக்சி போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com