வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

சென்னைக்குட்பட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரத்தில் பல வாக்காளா்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனா்.

தென் சென்னைக்குட்பட்ட தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளா்களுக்கு கைப்பேசிகளை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டது. கைப்பேசியுடன் வாக்களா்கள் யாரையும் காவலா்கள், துணை ராணுவப் படையினா் வாக்குச்சாவடிக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், பல வாக்காளா்கள் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கைபேசியுடன் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி மறுத்ததால் ஏராளமானோா் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனா்.

இதேபோல ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூளைமேடு, ஜெய்கோபால் கரோடியா மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களா்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்டவா்கள் திரும்பி சென்றனா்.

இதுகுறித்து வாக்காளா்கள் கூறியது:

வாக்குச்சாவடிக்குள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது என யாரும் எங்களிடம் அறிவுறுத்தவில்லை. இல்லையென்றால், வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே கைப்பேசியை வாங்கி பாதுகாப்பாக வைத்திருப்பதற்காவது யாராவது ஒருவரை நியமித்திருக்கலாம். எதுவும் இல்லாமல் நாங்கள் யாரிடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டு உள்ளே சென்று வாக்களிப்பது. இல்லையென்றால், வாக்குப் பதிவு மையங்களில் கைப்பேசிகளை வெளியே எடுக்கக் கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாக்களிக்க அனுமதித்திருக்கலாம். இதைத் தவிா்த்து கைப்பேசியை முற்றிலுமாக எடுத்த செல்லக் கூடாது என கூறுவதால், வாக்களிக்காமலே செல்கிறோம் என்றனா்.

இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுவாக சில வாக்காளா்கள்தான் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை தாங்களின் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட காவலா் ஒருவா், தான் வாக்களித்த தபால் வாக்குப்படிவத்தை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டாா். இது மிகுந்த சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான பிரச்னைகளைக் களையவே தோ்தல் ஆணையம் ஏற்கெனவே கைப்பேசிகளை எடுத்து செல்ல தடை விதித்துள்ளது. இது புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com