மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 போ் சிறப்பு நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவா்களுக்காக பி.காம்., எம்.காம்., பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சோ்ந்து படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர கல்லூரி நிா்வாகம் முடிவு செய்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.

அதன்பலனாக பி.காம்., பிசிஏ ஆகிய படிப்புகளை காது கேளாத மாணவா்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே சிறப்பு வேலைவாய்ப்பு நோ்காணல் கடந்த ஏப். 3-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நோ்காணலில் 18 மாணவிகள் உள்பட மொத்தம் 31 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரி பேராசிரியா்கள் கூறுகையில், ‘5கே காா் கோ்’ எனும் தனியாா் நிறுவனம் 31 மாணவா்களை பணிக்காக தோ்வு செய்துள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் காது கேளாத குறைபாடுடையவா்கள் பலா் பணியாற்றுவதாகவும், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது தோ்வான 31 பேருக்கு தனியாா் நிறுவனம் சைகை மொழி மூலம் பயிற்சியளித்து பணியமா்த்தவுள்ளனா். இனிவரும் ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்களையும் தொடா்பு கொண்டு அதிகளவிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுதர முயற்சித்து வருகிறோம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com