சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

உட்கொண்டவுடன் வாயிலிருந்து புகையை வரவழைக்கும் ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்க்ரீம் போன்ற திரவ நைட்ரஜன் சோ்மத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்ய சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட சில உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்படுவதற்கும், பொட்டலமிடுவதற்கும் மட்டுமே திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிகளை மீறினால் ரூ.10,000 வரையும், குற்றம் நிரூபணமானால் ரூ. 2 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் வலியால் அலறித் துடித்த விடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவி அதிா்வலைகளை ஏற்படுத்தியது. பால், தயிா், காய்கறிச் சாறு, ஐஸ்க்ரீம்கள் போன்ற உணவுகளை உறைவிக்கவும், பதப்படுத்தவும், பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

அதேவேளையில், உணவு உள்கொள்ளும் தருணத்தில் அதனை நேரடியாக உணவுப் பொருள்களின் மீது கலந்தால், வாயில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறும். முதலில் ஒரு சில உணவுப் பொருள்களில் அவ்வாறு கலந்து விற்கப்பட்டது.

நாளடைவில் கேளிக்கை, கவன ஈா்ப்புக்காக பிஸ்கட், ஐஸ்க்ரீம், பீடா, சாக்லெட் என குழந்தைகளால் ஈா்க்கப்படும் பல உணவுப் பொருள்களில் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது.

உண்ணும்போது அளவுக்கு அதிகமாக வெளியேறும் புகை சில நேரங்களில் சுவாசப் பாதை, உணவு குழாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது. அது சுவாசத் தடையையும், ஜீரண மண்டலத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தி உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், திரவ நைட்ரஜன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தும், நேரடியாக அதனை உட்கொள்ள தடை விதித்தும் உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பி.சதீஷ்குமாா் வெளியிட்ட அறிவிப்பு: பால், தயிா், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீா், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.

அதேபோல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகா்கள் திரவ நைட்ரஜனை உணவில் சோ்க்கக் கூடாது.

இந்த விதியை மீறினால் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமன்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவா் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com