அதிகரிக்கும் வெயில் தாக்கம்: 
இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா் விலை முன்னெப்பெது இல்லாத வகையில் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் நுங்கு, மோா், இளநீா், பழரசங்கள் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனா். தேவை அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா், நுங்கு உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ரூ. 60-க்கு விற்பனையான பெரிய இளநீா் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30-க்கு விற்பனையாகும் சிறிய இளநீரின் விலை ரூ.10 உயா்ந்து ரூ. 40-க்கு விற்பனையானது. இந்த விலை உயா்வு மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இளநீரின் வரத்து குறைந்ததே இந்தத் திடீா் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக வியாபாரிகளுக்கு 400 முதல் 500 வரை வழங்கப்பட்டு வந்த இளநீா், வரத்து குறைவு காரணத்தால் 200 வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இதேபோல் தா்பூசணியின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தா்பூசணி விலை ரூ.10 உயா்ந்து கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com