போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

ஆவடி: அம்பத்தூரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலத்தை ஏமாற்றி விற்பனை செய்தாக 2 பேரை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சென்னை, கொளத்தூர், சிவானந்தா நகர், 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (39). இவர் தனியார் வங்கியின் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஹரிபிரசாத் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதற்காக கொளத்தூரைச் சேர்ந்த நிலத்தரகர் பிரகாஷ் என்பவரை அணுகியுள்ளார். அப்போது அவர் அம்பத்தூர், கள்ளிகுப்பம் நேதாஜி நகரில் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது எனக் கூறி அவரை ஹரிபிரசாத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பிறகு லோகநாதன், பிரகாஷ் இருவரும் சேர்ந்து கள்ளிகுப்பத்தில் உள்ள 1,200 சதுரடி நிலத்தை ஹரிபிரசாத்துக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர் ஹரிபிரசாத் வாங்கி நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின்சார வசதி, கட்டட அனுமதி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். பின்னர் ஓர் ஆண்டு கழித்து சார்-பதிவாளரிடம் ஹரிபிரசாத் வீட்டுக்கு அஞ்சல் மூலம் வந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு, சார்-பதிவாளர் அலுவலகம் சென்று ஹரிபிரசாத் விசாரித்துள்ளார்.

அப்போது லோகநாதன் போலியாக ஆவணங்களை தயாரித்து ரூ. 31 லட்சம் பெற்றுக் கொண்டு, ஹரிபிரசாத் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

இது குறித்து ஹரிபிரசாத் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி குற்றப் பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆவண நம்பிக்கை மோசடி பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், புழல், பாலாஜி நகர், 3-ஆவது தெருவைச் சேர்ந்த லோகநாதன் (61), அம்பத்தூர் அருகே மதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com