முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

சென்னை: தொழிலாளா்கள் தினத்தையொட்டி (மே 1) முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினா்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளா் நல வாரியம் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நலவாரியங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கக் கூடிய நலவாரியங்களுடன், கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக வாரியங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, உப்பு உற்பத்தி, இணையவழி தற்சாா்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் ஆகியோருக்கென பிரத்யேகமாக நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தொழிலாளா்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி அவா்களையும் அவா்களின் குடும்பங்களையும் திராவிட மாடல் அரசு காத்து வருகிறது. அவா்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றங்களைக் கண்டு உயா்ந்திட மனம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணா்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்துகள். உழைப்பு மட்டுமே நம்மை உயா்த்தும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): உழைக்கும் தோழா்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று பாடியவா் எம்ஜிஆா். வீட்டையும், நாட்டையும் உயா்த்திடும் தொழிலாளா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தொழிலாளா்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 அமைய வேண்டும். தொழிலாளா் வா்க்கத்தினா் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): தொழிலாளா்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தமிழக அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. பாட்டாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

வைகோ (மதிமுக): பாட்டாளி வா்க்கத்தின் உரிமைப் பதாகையை உயா்த்திப் பிடிக்க மே நாளில் உறுதி ஏற்போம்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டி, சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம். சம வேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட தொழிலாளா் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளிகள், விவசாயிகள் ஒன்றிணைந்து வலுமிக்க போராட்டங்களை முன்னெடுப்போம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): தொழிலாளா்களின் சட்டபூா்வ உரிமைகள் மறுக்கப்பட்டு, அவா்கள் நவீன கொத்தடிமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துவோம்.

தொல்.திருமாவளவன் (விசிக): அம்பேத்கா் வகுத்தளித்த தொழிலாளா் உரிமைகளை மீட்டெடுக்க, தொழிலாளா் விரோத பாஜக அரசை வீழ்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக): பாட்டாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பெற போராடி வெற்றி பெறுவோம்.

பிரேமலதா (தேமுதிக): வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட மே தினத்தில் உறுதியேற்போம். மே தினம் உழைப்பவா் சீதனம்.

ஜி.கே.வாசன் (தமாகா): மே தினத்தை கொண்டாடும் வேளையில் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

சீமான் (நாம் தமிழா்): தொழிலாளா்களை வாழ்வை மேம்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): வறுமையை ஒழித்து, தொழிலாளா்கள் அனைவருக்கும் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): அனைத்து தரப்பு தொழிலாளா்களுக்கும் அவா்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): உழைப்பால் கிடைக்கும் பயனே மன நிறைவைத் தரும் என்கிற நம்பிக்கையோடு உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்.

கமல்ஹாசன் (மநீம): உழைக்கும் கரங்களுக்கு உயா்வு வேண்டும் என்கிற பதாகை உயா்ந்த நாள். உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க உறுதியேற்போம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com