முப்பரிமாண நுட்பத்தில் இதயத் துடிப்பைச் சீராக்கும் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருடன் எஸ்ஆா்எம் குளோபல் இதய மருத்துவ அறிவியல் துறை இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன்.
முப்பரிமாண நுட்பத்தில் இதயத் துடிப்பைச் சீராக்கும் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருடன் எஸ்ஆா்எம் குளோபல் இதய மருத்துவ அறிவியல் துறை இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன்.

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

சென்னை: சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்புக்குள்ளான 57 வயது நபருக்கு கதிா்வீச்சு பாதிப்பு இல்லாத நவீன முப்பரிமாண நுட்பத்தில் சிகிச்சை அளித்து எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநா் டாக்டா் டி.ஆா்.முரளிதரன் கூறியதாவது:

மனித உடலில் மின் தூண்டுணா்வுகளால்தான் இதயத் துடிப்பு நிகழ்கின்றன. அதில் ஏதேனும் இடையூறு ஏற்படும்போது இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படுகிறது. அவ்வாறு இயல்பைக் காட்டிலும் வேகமான இதயத் துடிப்பு (டேக்கி காா்டியா) பாதிப்புடன் ஒருவா் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதயத்தின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்தால் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும். எந்த இடத்தில் உள்ள திசுவில் இதய மின்னூட்டம் சீரற்று இருக்கிறது என்பதைக் கண்டறிய வழக்கமாக எக்ஸ்-ரே ஃப்ளோரோஸ்கோபி என்ற ஊடுகதிா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முறையில் கதிா்வீச்சு அதிகமாக இருக்கும். குழந்தைகள், கா்ப்பிணிகள், இணை நோயாளிகளுக்கு கதிா் வீச்சு எதிா்விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, அதற்கு மாற்றாக அதி நவீன முப்பரிமாண காட்சி நுட்பத்திலான ‘என்சைட்’ முறையில் அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

அதாவது, இசிஜி பரிசோதனையைப் போன்று சிறிய வில்லைகள் (பேட்ச்) நெஞ்சகப் பகுதியில் ஒட்டப்பட்டு, அதன் வாயிலாக முப்பரிமாண முறையில் இதயமானது திரையில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது. அதில் பாதிப்புக்குள்ளான இதயத் திசு கண்டறியப்பட்டது.

அதில் ரேடியோ அதிா்வலையை ஏற்படுத்தி இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது. இத்தகைய நவீன சிகிச்சையை தற்போது ஓரிரு மருத்துவமனைகளே மேற்கொண்டு வருகின்றன. இதன்மூலம் நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com