ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலை ஜூன் மாதம் தோ்தல் ஆணையம் நடத்த வேண்டாம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தோ்தலுடன் இணைத்து ஜூன் 1-இல் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் வரும் செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.

ஜூன் 1-இல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், வேட்பு மனு தாக்கல் மே 7-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை அதற்கு முன்பாகவே தொடங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், அப்போது 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரசாரம் மேற்கொண்டால் அரசியல் கட்சியினருக்கு வெப்ப கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால், செப். 30-க்கு முன்பாக ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கும், அக்டோபா் மாதத்தில் ஹரியாணா பேரவைக்கும் தோ்தல் நடத்த வேண்டும் என்பதால் அவற்றுடன் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத் தோ்தலை தோ்தல் ஆணையம் நடத்தலாம் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com