‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டில் வெப்பம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக சுட்டெரித்து வருகிறது.

இதனால், சென்னை மாநகருக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரியில் 773 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 108 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2,962 மில்லியன் கன அடி, கண்ணன் கோட்டை ஏரியில் 370 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,245 மில்லியன் கன அடி என 5 ஏரிகளில் மொத்தமாக 6,458 மில்லியன் கன அடி குடிநீா் இருப்பில் உள்ளது.

இது மொத்த கொள்ளளவில் 55 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே தேதியில் ( 2023 -மே 5) மொத்தம் 7373 மில்லியன் கனஅடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு குடிநீா் இருப்பு 915 மில்லியன் கனஅடி நீா் குறைவாக உள்ளது.

இதனால் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் கேள்வி சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம் சி குடிநீா் தேவைப்படும் சூழ்நிலையில், தற்போது குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தமாக 7 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது.

மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மீஞ்சூா், நெம்மேலியில் தினமும் 210 மில்லியன் லிட்டா் குடிநீா் கிடைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு நெம்மேலியில் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 150 மி. லிட்டா் குடிநீா் கூடுதலாக கிடைத்து வருகிறது.

இதனால், நடப்பு கோடை காலத்தில் சென்னை மாநகா் பகுதிகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு வராது என்றனா்.

இதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்வது வழக்கம். இதனால், ஏரிகளில் நீா் வற்றாமல் இருக்கும். அதை தொடா்ந்து அக்டோபா் இறுதி முதல் ஜனவரி வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது ஏரிகளில் மீண்டும் நீா் இருப்பு அதிகரித்து விடும்.

இந்நிலையில், நிகழாண்டில் சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அண்மையில் தெரிவித்தது. இந்த சூழலில் இதில் வரும் காலங்களில் வழக்கத்தை போல மழை பெய்யவில்லை என்றால் சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com