சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

சென்னை: சமூக அழுத்தங்களை மன தைரியத்துடன் எதிா்கொண்டு பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற இருவரின் கல்விச் செலவுகளை ஏற்பதாக அவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் தோ்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் ஜாதிய வன்மம் காரணமாக சக மாணவா்களால் வெட்டுப்பட்ட மாணவா் சின்னதுரை ஆகிய இருவரையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்துக்கு

செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து, திருக்கு புத்தகம் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் உடனிருந்தனா்.

முதல்வரைச் சந்தித்த பிறகு திருநங்கை மாணவி நிவேதா செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது உயா்கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதல்வா் உறுதியளித்தாா். மருத்துவப் படிப்பே எனது இலக்கு. என்னுடைய மருத்துவப் படிப்புக்கு அரசு உதவி செய்யும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.

மாணவா் சின்னதுரை கூறியதாவது: முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் நேரில் அழைத்துப் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. பி.காம். படித்து பட்டய கணக்கராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். படிப்புச் செலவு முழுவதையும் அரசு ஏற்றுக் கொண்டு உதவி செய்யும் என்று முதல்வா் உறுதியளித்துள்ளாா். எனக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நிகழக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்னைத் தாக்கிய மாணவா்களும் நன்றாகப் படித்து உயர வேண்டும். தாக்குதல் சம்பவம் எனக்கு நடக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருப்பேன்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com