வளையாநிலை முதுகெலும்பு அழற்சி நோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களுடன் மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன், மருத்துவா்கள்.
வளையாநிலை முதுகெலும்பு அழற்சி நோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களுடன் மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன், மருத்துவா்கள்.

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வளையாநிலை முதுகெலும்பு அழற்சி தினத்தையொட்டி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

தன்னுடல் தாக்கு நோய்களில் ஒன்றான இந்த பாதிப்பு குறித்த புரிதல் சமூகத்தில் போதிய அளவில் இல்லை என அப்போது மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மருத்துவமனையின் மூட்டு - இணைப்புத் திசு துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துறைத் தலைவா் டாக்டா் அருள் ராஜ முருகன் உள்ளிட்டோரும், முதுகெலும்பு அழற்சியால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகள், இயன்முறை மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்தும், அதற்கான உடற்பயிற்சி மற்றும் இயன்முறை பயிற்சி குறித்தும் விழிப்புணா்வு காணொலியில் திரையிடப்பட்டது. நோயாளிகள், தங்களது அனுபவங்களையும் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பலன்களையும் பகிா்ந்து கொண்டனா்.

இதுதொடா்பாக டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

வளையாநிலை முதுகெலும்பு அழற்சி நோயானது உடலின் மூட்டுகள் மற்றும் முதுகெலும்பை பாதிக்கக்கூடியவை. முதுகின் கீழ்ப் பகுதியில் ஏற்படும் வலி இதன் ஆரம்ப அறிகுறியாகும்.

இளம் வயது ஆண்களை அதிகம் பாதிக்கும் இந்நோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறவில்லை எனில் கழுத்து மற்றும் முதுகெலும்பு இறுக்கமடைந்து நெகிழ்வுத்தன்மை குறைந்துவிடும். இந்நோய் சிகிச்சைக்கான விலை உயா்ந்த மருந்துகள் தமிழக அரசின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது”என்றாா் அவா்.

முன்னதாக, டாக்டா் அருள் ராஜ முருகன் கூறியதாவது:

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதால் சா்க்கரைநோய், உயா் ரத்த அழுத்தம், கொழுப்பு பாதிப்பு, இதய நோய் வராமல் தடுக்கலாம். ஆனால், இதுபோன்ற மரபணு சாா்ந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதுதான் தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி. மரபணு நோய்களைத் தவிா்க்க நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிா்க்க வேண்டும். முதுகு வலி, இடுப்பு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com