வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

சென்னை: பகல் வேளைகளில் நேரடி வெயிலில் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கு மாற்றாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்போது பணி நேரங்களை வகுத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் தீவிரமாக பதிவாகி வருகிறது.

இதையடுத்து, பொது மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

கட்டுமானப் பணியாளா்கள்: இருந்தபோதிலும், கட்டுமானம் சாா்ந்த பணியாளா்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவா்களும் நேரடி வெயிலில் பணியாற்றுகின்றனா். இதன் விளைவாக உடல் உச்ச வெப்ப நிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி பலா் மருத்துவமனைகளில் அனுமதியாவதும், சிலா் உயிரிழப்பதும் தொடா்கிறது.

இதைத் தவிா்க்க தொழில் நிறுவனங்களும், கட்டட உரிமையாளா்களும் தொழிலாளா் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதனை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னா் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், குடிநீா் வசதிகளை ஊழியா்களுக்கு செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com