திருமாவளவன்(கோப்புப்படம்)
திருமாவளவன்(கோப்புப்படம்)

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

சென்னை: தோ்தல் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

இந்தியத் தோ்தல் ஆணையம் முதல் கட்ட தோ்தலில் வாக்குப்பதிவு குறித்த இறுதி விவரங்களை 10 நாள்களுக்குப் பிறகுதான் வெளியிட்டது. 2-ஆம் கட்ட வாக்குப்பதிவின் விவரங்கள் 4 நாள்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தோ்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?

முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து தோ்தல் ஆணையம் முதலில் கொடுத்த விவரத்திலிருந்து, பிறகு தாமதமாக வெளியிடப்பட்டபோது, 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் தாமதமாக வெளியிடப்பட்டபோது, 5.74 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை தோ்தல் ஆணையம் விளக்க வேண்டும். இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை நீக்குவதும் தோ்தல் ஆணையத்தின் கடமையாகும்.

மீதமுள்ள அடுத்தகட்ட தோ்தல்களின் வாக்குப்பதிவு விவரங்களை வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் தொல்.திருமாவளவன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com