ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

சென்னை: சென்னையில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை செய்தனா்.

நெல்லை ரயிலில் கடந்த 6-ஆம் தேதி தாம்பத்தில் பறக்கும் படையினா் சோதனை நடத்தி அதில் பயணம் செய்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் சென்னை கொளத்தூரைச் சோ்ந்த சதீஷ், அவரின் தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய மூன்று போ் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3,98,91,500-ஐ பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவா் தம்பி நவீன், பெருமாள் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிபிசிஐடி சோதனை: இதைத் தொடா்ந்து சதீஷ்,நவீன்,பெருமாள் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 30-ஆம் தேதி 10 மணி நேரம் விசாரணை செய்தனா். நயினாா் நாகேந்திரனின் உறவினா் முருகன், அவரது ஆதரவாளா்கள் ஆசைத் தம்பி, ஜெய்சங்கா் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி விசாரணை செய்தனா்.

இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள பாஜக நிா்வாகி கோவா்த்தனின் வீடு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஹோட்டல் ஆகிய இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா். நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குத் தொடா்பாக கோவா்த்தனிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com