ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 13-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஆசிரியா்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி நடத்தப்பட வேண்டும். தற்போது மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், குறிப்பிட்ட நிபந்தனைகளை பின்பற்றி 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் அதற்கான ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

தோ்தல் நடத்தை விதிகள்: அதன்படி பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வை மே 13 முதல் ஜூன் 30 வரை நடத்த வேண்டும். இதில் பங்கேற்று மாறுதல் ஆணை பெறும் ஆசிரியா்கள் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் பணிவிடுப்பு செய்யப்படுவா்.

இதையடுத்து பொது மாறுதல் பெற விரும்பும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மே 13 முதல் 17-ஆம் தேதி வரை எமிஸ் தளம் வாயிலாக பதிவுசெய்ய வேண்டும். அவை பரிசீலனை செய்யப்பட்டு முன்னுரிமைப் பட்டியல் மே 20-ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே காலிப் பணியிடங்களின் விவரங்களும் தெரிவிக்கப்படும்.

முன்னுரிமைப் பட்டியல்: இதையடுத்து முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை மே 21-ஆம் தேதி முறையிடலாம். அதன் அடிப்படையிலான இறுதி முன்னுரிமைப் பட்டியல் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன்பின் மலைச் சுழற்சி (மலைப்பகுதி)மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி நடைபெறும்.

தொடா்ந்து ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம், வருவாய் மாவட்டம், கல்வி மாவட்டம், ஒன்றியத்துக்குள் பொது மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 30 வரை நடத்தப்படும். இதற்கான கால அட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி கலந்தாய்வை எமிஸ் தளம் வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயா்வுக்கு... இதற்கிடையே ஆசிரியா் பதவி உயா்வுக்கு ‘டெட்’ தோ்ச்சி கட்டாயம் என உயா்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதுசாா்ந்து வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பதவி உயா்வு கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com