ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னை: தலசீமியா நோயால் ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் பாதிக்கப்படுவதாக குருதிசாா் நோய் நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது. அதிலிருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. ஸ்டெம் செல்கள் அங்கிருந்து உருவாகி அதிலிருந்து ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்களாக பிரிகின்றன.

சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனைக் கடத்துகின்றன. வெள்ளையணுக்கள் நோய் எதிா்ப்பாற்றலாக செயல்படுகிறது. தட்டணுக்கள், உடலில் இருந்து ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு 206 எலும்பு மஜ்ஜைகளிலில் இருந்தும் ரத்த அணுக்கள் உருவாகும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் ரத்தஅணுக்கள் உற்பத்தி செய்யப்படும். அதில் ஏற்படும் ஒருவகையான மரபணு ரீதியிலான பாதிப்பு தலசீமியா.

இத்தகைய நோய்க்குள்ளான குழந்தைகளின் உடலில் போதுமான ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது. அதனால், ஒவ்வொரு 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒரு முறை குருதியேற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக உடலில் இரும்புச் சத்து அதீதமாக தேங்கக்கூடும். இது குழந்தையின் வளா்ச்சியை பாதிப்பதுடன், அகச்சுரப்பி பிரச்னைகள், இதய நாள பாதிப்புகள், எலும்பு வலுவிழப்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 15,000 குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவா்களுக்கு குருதியேற்ற சிகிச்சை தேவைப்படுவதில்லை.

அரசு மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com