ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: ஒப்பந்தம், பொது அதிகாரம் போன்ற பணிகளுக்கான முத்திரைக் கட்டண உயா்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கானசட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது. சட்டத் திருத்தத்தில் தெரிவித்தபடி, தத்தெடுப்பு, பிரமாண பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட கட்டண விகிதங்கள் இப்போது அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், பிரமாண பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300-லிருந்து ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரைய பத்திரம் ரத்துக்கு ரூ.50-ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20- ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25-ஆக இருந்த கட்டணம் ரூ.500-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஒருவா் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அதற்கான முத்திரைக் கட்டணமாக ரூ.1000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என்றிருந்த முத்திரைக் கட்டணம் ரூ.200-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்குதாரா் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300-லிருந்து ரூ.1,000 ஆகவும் உயா்ந்துள்ளது. ஐந்து நபா்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகார பத்திரத்துக்கு முன்பு ரூ.100 முத்திரைக் கட்டணமாக இருந்தது. அது ரூ.1000 ஆகவும், ஐந்துக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூ.175-லிருந்து ரூ.1000 ஆகவும் முத்திரைக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அசையா சொத்துகள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு சொத்தின் சந்தை மதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அசையா சொத்து விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு முத்திரைக்கட்டணம் ரூ.1000 எனவும், குடும்பத்தினா் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து அடமானத்தை திரும்ப பெறுவதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.80 லிருந்து ரூ.1000 ஆகவும், பிணை பத்திரத்துக்கு ரூ.80-லிருந்து ரூ.500 ஆகவும், செட்டில்மென்ட் திரும்பப் பெறுவதற்கு ரூ.80 லிருந்து ரூ.1000 ஆகவும், குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.40-லிருந்து ரூ.1000 ஆகவும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடம் இருந்து மற்றொரு அறங்காவலா் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும் போது ரூ.30 ஆக இருந்த முத்திரைக்கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூ.180 ஆக இருந்த முத்திரைக்கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைக்கட்டணம் ரூ.120 லிருந்து ரூ.1000 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு கடந்த 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com