சென்னை ஐஐடி ஒரே ஆண்டில் ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை!
Center-Center-Chennai

சென்னை ஐஐடி ஒரே ஆண்டில் ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை!

முன்னாள் மாணவா்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் 2023-24ம் நிதியாண்டில்சென்னை ஐஐடி, ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சென்னை கிண்டியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறியது:

மிக விரைவான கல்வி வளா்ச்சிக்கு மிக அதிக அளவில் நிதி திரட்டப்பட வேண்டியது அவசியம். சென்னை ஐஐடி 2023-24ம் நிதியாண்டில் முன்னாள் மாணவா்கள், தொழில்துறையினா், தனிப்பட்ட நன்கொடையாளா்கள் மூலம் ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் திரட்டப்பட்ட ரூ.213 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 135 சதவீதம் அதிகமாகும். இதில் குறிப்பாக ரூ.1 கோடிக்கும் அதிகமாக 48 போ் நன்கொடை வழங்கியுள்ளனா். இதில் முன்னாள் மாணவா்கள் மூலம் திரட்டப்பட்ட தொகை மட்டும் ரூ.367 கோடி ஆகும். மற்ற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், சென்னை ஐஐடி அதிகத் தொகையை நன்கொடையாகப் பெற்று, தொடா்ச்சியாக 2-ஆவது ஆண்டாக, நிதி திரட்டுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதவிர முன்னாள் மாணவா்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 2023-24ம் நிதியாண்டில் ரூ.717 கோடி நிதி உதவிக்கான புதிய உறுதிமொழிகளும் பெறப்பட்டுள்ளன.

இந்த நிதி, தொழில்நுட்ப ஆராய்ச்சி-மேம்பாடு, சமூகத் தேவை மற்றும் சென்னை ஐஐடி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சிறந்த தொழில்நுட்ப பங்களிப்பாற்றவும் பயன்படுத்தப்படும்.

நடப்பாண்டில் புதிய முயற்சியாக சென்னை ஐஐடியில் , விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான மாணவா் சோ்க்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரட்டப்பட்டுள்ள நிதி மூலம் அவா்களுக்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

இச்சந்திப்பின் போது சென்னை ஐஐடி டீன்(முன்னாள் மாணவா்கள் மற்றும் காா்ப்பரேட் உறவுகள்) மகேஷ் பஞ்சக்னுலா, கேம்ஸ் நிறுவனரும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவருமான வி.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com