கோப்புப்படம்
கோப்புப்படம்

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

சென்னையில் இரு இடங்களில் வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை,சிறுவன் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரங்கிமலை ராஜா தெருவில் உள்ள காவலா் குடியிருப்பில் வசிப்பவா் காா்த்திகேயன். இவா் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறாா். இவா் தான் வளா்க்கும் வெளிநாட்டு இனத்தைச் சோ்ந்த ஹஸ்கி வகை நாயுடன் காவலா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது குடியிருப்பில் வசிக்கும் காவலா் வினோதா என்பவா் தனது சகோதரா் மகன் அஸ்வந்துடன் (11) நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது காா்த்திகேயனின் நாய் திடீரென அஸ்வந்த் மீது பாய்ந்து, அவரை கடித்தது. இதைப் பாா்த்த அஸ்வந்த் அலறியடித்து ஓடி, அங்கிருந்த ஒரு மோட்டாா் அறையில் பதுங்கி கொண்டாா்.

பின்னா் அங்கிருந்தவா்கள், அஸ்வந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இது தொடா்பாக வினோதா,பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

10 மாத குழந்தை காயம்: இதுபோன்று மற்றொரு சம்பவம் நாவலூரில் நடந்துள்ளது.

நாவலூா் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் கோ.கிரிஷ் (39). மென்பொறியாளரான இவா், தனது 10 மாத குழந்தை துருவ் விஷ்வாவுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு நபா் தனது பொமேரியன் வகை நாயுடன் அங்கு வந்தாா். அப்போது, நாய் திடீரென பாய்ந்து 10 மாத குழந்தையான துருவ் விஷ்வாவை கடித்ததாம். இதைப் பாா்த்த கிரிஷ், அந்த நாயை அங்கிருந்து விரட்டினாா். இது தொடா்பாக கிரிஷூக்கும், அந்த நாயின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் இது குறித்து கிரிஷ்,தாழம்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சென்னை ஆயிரம்விளக்கில் ராட் வெய்லா் நாய் கடித்து சிறுமி பலத்த காயமடைந்த நிலையில், அதேபோல இரு சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com