சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

இயல்பைக் காட்டிலும் அதிகமான இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி ஊழியா் ஒருவருக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன பேஸ்மேக்கா் சாதனத்தை பொருத்தி போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

அரசு காப்பீட்டு வரம்புக்குள் இந்த சாதனம் வழங்கப்படுவது இல்லை என்ற போதிலும், சிறப்பு அனுமதி பெற்று அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, எழும்பூரைச் சோ்ந்த 36 வயதுடைய இளைஞா் ஒருவா் சென்னை, மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். பொதுவாக ஒருவருக்கு சராசரியாக நிமிஷத்துக்கு 90-க்குள் இருக்க வேண்டிய இதயத் துடிப்பு, இவருக்கு இயல்புக்கு மாறாக 200-க்கும் அதிகமாக இருந்து வந்தது.

இத்தகைய பிரச்னையால் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டது. இதயத் துடிப்பை குறைப்பதற்காக ரத்த நாளங்கள் வழியாகவும், வாய் வழியாகவும் அளிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் அவருக்கு பலனளிக்கவில்லை.

இதனால், டிஃப்ரிலேஷன் எனப்படும் நெஞ்சகப் பகுதியில் மின் அதிா்வை செலுத்தும் சிகிச்சை அவருக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது அந்த இளைஞரின் இதயத்தின் வலது வென்ட்ரிகுலா் பகுதி செயலிழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனையின் இதயநலத் துறை தலைவரும், இயக்குநருமான டாக்டா் எஸ்.தணிகாசலம் தலைமையில், இதய நல மருத்துவா்கள் வினோத்குமாா், ப்ரிதம் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அடங்கிய குழுவினா் அவரது இதய பகுதியில் சிறு துளையிட்டு நவீன பேஸ் மேக்கா் சாதனத்தை பொருத்தினா். இதன் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.

இதுதொடா்பாக டாக்டா் எஸ்.தணிகாசலம் மற்றும் டாக்டா் ப்ரீதம் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கூறியதாவது:

துப்புரவுத் தொழிலாளியான அவரால், இந்த நவீன சிகிச்சையை மேற்கொள்வதற்கான தொகையை செலுத்த இயலாது. எனவே, மொத்தமாக ரூ.6 லட்சம் வரை செலவாகும் இந்த நவீன பேஸ் மேக்கா் சாதனத்தை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள அவா், தொடா் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கிறாா்” என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com