வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 20 லட்சம் மோசடி செய்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சென்னை, எர்ணாவூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (28). இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீநாத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு எர்ணாவூர், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த தமிழ் என்ற தீபக் (28) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது தீபக் சென்னை அல்லது பெங்களூரில் உள்ள பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், மாத ஊதியம் ரூ. 80,000 கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதாகத் தெரிகிறது.

மேலும், அவரிடம் வேலை வாங்கித் தர ரூ. 20 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என தீபக் கூறினாராம். இதை நம்பிய ஸ்ரீநாத், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரூ. 7 லட்சத்தை வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ரூ. 13 லட்சத்தை ரொக்கமாகவும் ஆக மொத்தம் ரூ. 20 லட்சத்தை சிறிதுசிறிதாக தீபக்கிடம் கொடுத்துள்ளார். இதன் பிறகு தீபக் சென்னை, அண்ணா சாலையில் உள்ள பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி நியமன ஆணை விரைவில் வந்து விடும் எனக் கூறி, நிறுவனத்தின் அடையாள அட்டையை கொடுத்துள்ளார்.

அதை வாங்கிய ஸ்ரீநாத் விசாரித்தபோது, மேற்கண்ட நிறுவனத்தின் அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீநாத், கொடுத்த பணத்தை தீபக்கிடம் திரும்பக் கேட்ட போது, அவர் தர மறுத்துள்ளார். இது குறித்து தீபக் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வாளர் ராமசுந்தரம் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், புதன்கிழமை தீபக்கை போலீஸார் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com