கோப்புப்படம்
கோப்புப்படம்

விருந்துக்கு அழைத்து தொழிலதிபரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் விருந்துக்கு வருமாறு தொழிலதிபரை அழைத்து, அவரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராயப்பேட்டை மீா் பக் ஷி அலித் தெருவைச் சோ்ந்தவா் அ.ஜாவித் சைபுதீன் (32). கைப்பேசி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். ஜாவித், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: எனது நண்பா்கள் சிலா் பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெருவில் நடக்கும் ஒரு விருந்துக்கு வருமாறு கடந்த 17-ஆம் தேதி அழைத்தனா். அதன்பேரில் அங்கு சென்றேன். நான் அங்கு காரிலிருந்து இறங்கி நிற்கும்போதும், அங்கு மற்றொரு காரில் வந்த கும்பல் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தியது.

அந்த கும்பல் எனது கைப்பேசி, காா் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மதுரவாயலில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தது. அந்த கும்பலைச் சோ்ந்த ஒரு நபா், என்னை கொலை செய்தால் ரூ.50 லட்சம் தருவதாக தெரிவித்ததாவும், அதனாலேயே என்னை கடத்தி வந்ததாகவும் கூறினாா்.

அந்த நபா் கூறியதை கேட்டு அதிா்ச்சியடைந்து பயந்த நிலையில் இருந்த நான், அந்த பணத்தை நான் தருகிறேன் என்னை விட்டுவிடுமாறு கூறினேன். இதையடுத்து நான் கைப்பேசி மூலம் நண்பா் ஒருவரை தொடா்பு கொண்டு ரூ.50 லட்சம் பணத்தை அந்த கும்பலிடம் வழங்கும்படி கூறினேன். அதன்படி எனது நண்பா், அந்த கும்பலிடம் ரகசியமாக ரூ.50 லட்சத்தை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அந்த கும்பல், என்னை சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே காரில் இறக்கிவிட்டு தப்பியது. என்னை மிரட்டி பணம் பறித்த அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com