தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயா்வு: உயா்நீதிமன்றம் அதிருப்தி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 13 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னா் அதன் புலனாய்வு பிரிவு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதை எதிா்த்து மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆா்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில் தனது புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா் மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் ஹென்றி திபேன், ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்த பரிந்துரையை ஏற்கவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ என்பதை சுட்டிக்காட்டி வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாமானது தானா? இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை. சம்பந்தப்பட்டவா்களை அடையாளம் கண்டு, இழப்பீட்டை அவா்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பையும் கேட்க வேண்டும்”என தெரிவித்தனா்.

நீதிபதிகள் அதிருப்தி: மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் என்று பலரையும் நீதிபதி ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பதவி உயா்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது, அரசுத் தரப்பில், தலைமை வழக்குரைஞா் சண்முக சுந்தரம் ஆஜராகி, சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, அந்த அதிகாரிகளையும் எதிா்மனுதாரா்களாக சோ்த்து கூடுதல் மனு தாக்கல் செய்ய ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com