வீட்டு வசதி வாரியக் கட்டடத்தில் பாழடைந்து கிடக்கும் அரசின் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடத்தில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆயிரக்கணக்கில் பாழடைந்து உள்ளன.

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடத்தில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆயிரக்கணக்கில் பாழடைந்து உள்ளன.
 சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் எதிரேயுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகக் கட்டடம் பாழடைந்து காணப்படுகிறது. இதில் செயல்பட்டு வந்த பொது நூலகத்துக்கு பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். இந்த கட்டட வளாகத்துக்குள் உள்ள பகுதியை சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தி வந்தது.
 இதுகுறித்து விரிவான செய்தியை தினமணி நாளிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்து நூலகத்தை மேற்கு முகப்பேர் 5-ஆவது பிளாக்கிற்கு மாற்றினர். நூலகத்தின் ஒரு பகுதியை மாற்றினாலும், இன்னும் ஏராளமான புத்தகங்கள் இங்கேயே உள்ளன.
 இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ளவர்கள் மூலம் கிடைத்த தகவல்படி நூலகத்தின் எதிர்த்திசையில் உள்ள அறையில் சுமார் 4,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.
 இந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் யாரால் இங்கு வைக்கப்பட்டன என்று வீட்டு வசதி வாரிய மேற்பார்வைப் பொறியாளர் கூறியதாவது:
 அவை கடந்த 2010-ஆம் ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசால் வழங்கவிருந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்.
 அப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் பாதுகாப்புடன் வைக்க இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இடம் கொடுத்தோம். தற்போது இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டவுள்ளோம்.
 இதுகுறித்து வருவாய்த் துறைக்கு முறைப்படி தெரிவிப்போம், அவர்கள் எடுத்துச் செல்லவில்லை என்றால் காவல் நிலையத்தில் ஒப்படைப்போம் என்றார். இதுகுறித்து வருவாய்த் துறையில் கேட்டபோது தற்போதுள்ள அதிகாரிகளுக்கு எந்த விவரமும் தெரியவில்லை என்றனர்.
 தற்போது இந்த தொலைகாட்சிப் பெட்டிகளை எடுத்து பொதுமக்களுக்கு வழங்கினாலும் அவை இயங்காது. பாழானது, பாழானதுதான் எனக் கூறப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com