ஊழியர்கள் திண்டாட்டம்; இடைத்தரகர்கள் கொண்டாட்டம்: திணறும் வட்டாட்சியர் அலுவலகங்கள்

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஊழியர்கள் திண்டாட்டம்; இடைத்தரகர்கள் கொண்டாட்டம்: திணறும் வட்டாட்சியர் அலுவலகங்கள்

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசில் பல்வேறு துறைகள் இருந்தபோதிலும், மக்களோடு நேரடியாக அதிகத் தொடர்புடையது வருவாய்த் துறையாகும்.
அம்பத்தூர், ஆவடி வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்றால் ஊழியர் யார், இடைத்தரகர் யார் என்று தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இடைத் தரகருக்கு இருக்கும் அதிகாரம், அங்கு பணியில் உள்ள ஊழியருக்கு கிடையாது என்கின்றனர் அனுபவப்பட்ட பொதுமக்கள். நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் சென்றால் கருப்பா, வெள்ளையா என்கின்றனர். கருப்பு என்றால் வருவாய்த் துறையில் ஏற்கெனவே அண்மையில் ஓய்வு பெற்றவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக வழங்கப்படுவது.
சட்டப்படிதான் பட்டா வாங்குவேன் என்று அடம்பிடிப்பவர்கள் வெள்ளை பட்டா கேட்டு போனால் பத்திரம் சரியில்லை, தாய்பத்திரம் கொண்டுவர வேண்டும், தொடர் பத்திரம் தேவை, பத்திரத்தில் உள்ள அளவுக்கும், நிலத்தின் அளவுக்கும் ஒத்துப் போகவில்லை. அது இல்லை, இது இல்லை என அலைக்கழிக்கப்படுவது வாடிக்கை. பட்டாவுக்கு விண்ணப்பம் கொடுத்தால் பல ஆண்டுகள் கழித்து தான் கிடைக்கப்பெறுகிறது.
இதுகுறித்து மூத்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் கூறியது:
அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் வருவாய்த் துறை மூலம் தான் வழங்கமுடியும். வருவாய்த் துறை ஒன்றுதான் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளது.
தேர்தல், வாக்காளர் அடையாள அட்டை, நிலம் சம்பந்தமானவை, வரி வசூல், தீவிபத்து ஏற்பட்டால் அறிக்கை கொடுப்பது, நிவாரணம் வழங்குவது, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், ஜாதி மோதல், வரதட்சிணை சாவு, கேட்பாரற்ற சடலம் குறித்த புகார் என இப்படி ஏராளமான பணிச் சுமை உள்ளது.
ஆனால் தேவையான அளவுக்கு ஊழியர்கள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் வருவாய்த் துறை திண்டாடி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தினக்கூலிகளை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு சாதகமான நபரை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை பேசுபவர்களும் இவர்கள் தான். கடைசிவரை அதிகாரிகளை காட்ட மாட்டார்கள் என்றார்.
வருவாய்த் துறை நிர்வாகம் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். இடைத் தரகர்களை அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். அதில் கண்டிப்பாக பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வட்டாட்சியரை 3 ஆண்டுகளாவது ஒரு வட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பணியாற்றும் வட்டத்திலேயே அவர் கண்டிப்பாக தங்கியிருக்க உத்தரவிட வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் கே.பி.முகுந்தன்.
நில ஆக்கிரமிப்பும், பி.நமூனா சான்றும்...!


அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள், அந்த இடத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதற்கு ஆதாரமாக நீதிமன்றத்திலும், வருவாய்த் துறையிலும் பட்டா கேட்டு, இடத்தை சொந்தம் கொண்டாட அடித்தளம் அமைத்து தருவது வருவாய்த் துறையால் வழங்கப்படும் பி.நமூனா சான்றிதழாகும்.
இந்த பி.நமூனா சான்றிதழ் வருவாய்த் துறையினருக்கு பணமழை பொழியச் செய்வது. பி.நமூனாவில் உள்ள பெயருக்கும், வருவாய்த்துறையில் உள்ள ஆவணங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் நகல் எடுத்து நிலத்தின் மதிப்பை பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்று விடுவார்கள்.
பி.நமூனா சான்றை பணியில் உள்ளவர் ரூ.10,000க்கு விற்கிறார் என்றால், அத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் ரூ.2,000-க்கும் விற்கின்றனர். இதற்காகவே இடைத் தரகர்கள் ஏராளமாக உள்ளனர்.
இந்த பி.நமூனா மூலம் சம்பந்தப்பட்டவருக்கு, 'அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள். இந்த நமூனா பெற்ற 15 நாளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' என்பதுதான் நமூனாவின் சாரம்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் பொது பிரிவினருக்கு ஒரு சென்டுக்கு ரூ.100 வீதமும், தாழ்த்தப்பட்ட,மலைவாழ் மக்கள் என்றால் ஒரு சென்டுக்கு ரூ.10 வீதமும் வருவாய்த் துறைக்கு அபராதமாகச் செலுத்தவேண்டும்.
அதே வேளையில் குறிப்பிட்ட புறம்போக்கு நிலம் நீர்பிடிப்பு பகுதியாக இருந்தால் வீடுகட்ட அனுமதியில்லை.
வருவாய்த் துறையில் எந்தச் சூழ்நிலையில் பி.நமூனா வழங்கப்பட்டாலும் குறிப்பிட்ட இடம் அரசுக்கு தேவைப்படுகிறது என்றால் பி.நமூனா வழங்கப்பட்டு, குறிப்பாணை 1, 15 நாள் இடைவெளியில் 2 வழங்கி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அரசு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் பி.நமூனா பெற்ற பின்னர் ஆண்டுதோறும் அபராதம் செலுத்தி நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பி.நமூனாவை வாரிசுகளுக்கு தவிர வேறு யாருக்கும் பெயர் மாற்றம் செய்ய முடியாது.

* அம்பத்தூர், ஆவடி வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்றால் ஊழியர் யார், இடைத்தரகர் யார் என்று தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இடைத் தரகருக்கு இருக்கும் அதிகாரம், அங்கு பணியில் உள்ள ஊழியருக்கு கிடையாது என்கின்றனர் அனுபவப்பட்ட பொதுமக்கள். *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com