தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்: 1 குடம் தண்ணீர் ரூ.7 க்கு விற்பனை ?

தமிழகத்தில் மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் ஆவடி பெரு நகராட்சி மிகப் பெரிய நகராட்சியாகும். 65 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, நகராட்சி எல்லைக்குள் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர்
ஆவடியில் பணம் கொடுத்து குடிநீர் பிடிக்கும் பொதுமக்கள்.
ஆவடியில் பணம் கொடுத்து குடிநீர் பிடிக்கும் பொதுமக்கள்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் ஆவடி பெரு நகராட்சி மிகப் பெரிய நகராட்சியாகும். 65 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, நகராட்சி எல்லைக்குள் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மொத்தம் 48 வார்டுகள் கொண்ட ஆவடியில் சுமார் 2 ஆயிரத்து 435 அங்கீகாரம் பெற்ற சாலைகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 615 கிலோ மீட்டர் ஆகும்.
சென்னை மாநகரில் இடநெருக்கடியால் குடிபெயர்ந்த ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினர் போன்றோர் ஆவடி சுற்றுவட்டரத்தில் குடியேறினர்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளில் ஆவடி அசுர வளர்ச்சியடைந்தது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் பிளாஸ்டிக் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீருக்காக வீதி, வீதியாக அலைவதைக் கண்டால் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல் தோன்றும். 
ஆவடி நகராட்சியால் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளையும், சாதனைகளையும் கேட்டால் தமிழகத்திலேயே அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பகுதிபோன்று தோன்றும். ஆனால், இது மாயத்தோற்றமே. நிஜத்தில் அனைத்துத் திட்டங்களும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. 
சாலைகள் அனைத்தும் போர் நடந்த பகுதிபோல் காட்சி தரும். சாலைகளின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்திற்கு இடையூறாக வாகன நிறுத்தம், வற்றாத ஜீவநதியாக கழிவுநீர் ஆறாக ஓடும். 
கடந்த 2008-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, ஆவடி நகராட்சியில் குடிநீர் திட்டம் நிறைவேற்ற ரூ.103.84 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாûணை 2008-ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்டது. 
இதன்படி ஆவடி நகராட்சிக்கு புழல் ஏரியிலிருந்து நாள்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஒப்புக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, திருமுல்லைவாயல் சிவன் கோயில், நாகம்மை நகர், ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, பட்டாபிராம், சேக்காடு ஆகிய இடங்களில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளும், முத்தாபுதுப்பேட்டையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்கத் தொட்டிகளும் கட்டப்பட்டன. மேலும் 7 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளும் கட்டப்பட்டன. இதற்கான குடிநீர் பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வேண்டி சுமார் 46 ஆயிரம் பேர் தலா ரூ.10 ஆயிரம் என முன்வைப்பு தொகையை செலுத்தினார்கள். பணிகள் நிறைவு பெறும் நிலையில் சென்னை குடிநீர் வாரியம் , புழல் ஏரியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், ஆவடிக்கு தண்ணீர் வழங்க இயலாது எனக் கூறிவிட்டனர்.
இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதிகாரிகள் தீர்வு காணாமல், குடிநீர் திட்டத்தையே கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், தற்போது குழாய்கள் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 
குடிநீர் வருமா, வராதா... என்ற குழப்பத்தில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் பாராமுகமாய் இருக்கிறது என சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு செலவு செய்து விட்டு , மக்களின் ஜீவாதார பிரச்னையான குடிநீர் தேவையை நிறைவேற்றாமல் லாரிகள் மூலம் வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கி வருகின்றனர். 
இதுகுறித்து ஆவடி நகராட்சி முன்னாள் தலைவர் சா.மு.நாசர் கூறியது: 
2008-ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி, ஆவடிக்கு குடிநீர் திட்டம் கொண்டுவந்தார். அப்போது சென்னை குடிநீர் வாரியம் நாள்தோறும் தண்ணீர் தருவதாக ஒப்புக்கொண்டதன் விளைவாக திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினோம். பணி முடியும் தருவாயில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 
ஆவடி எல்லையில் உள்ள கோயில்பதாகை, வெள்ளானூர், சேக்காடு, திருமுல்லைவாயல், ஆரிக்கம்பேடு ஆகிய ஊர்களிலிருந்து செல்லும் மழைநீர்தான் புழல் ஏரியை நிரப்புகிறது. எங்கள் ஊர் தண்ணீரை எடுத்துக்கொண்டு எங்களுக்கே தண்ணீர் இல்லை என்கின்றனர். புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர், குடிநீர் பிரச்னையில் தலையிடவில்லை என்றார். அமைச்சரின் தொகுதியிலேயே ஒரு குடம் தண்ணீர் ரூ.7 லிருந்து ரூ.10 வரை விற்கப்படுகிறது.
இதனால் ஏழை, நடுத்தரவர்க்கம் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ.1000 செலவாகிறது. 
இப்போதே இந்த நிலை என்றால் மே, ஜூன் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகும். இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்றார். 
இதுகுறித்து ஆவடி எம்எல்ஏவும், அமைச்சருமான க.பாண்டியராஜன் கூறியது: 
ஆவடி தொகுதியில் குடிநீர் பற்றாகுறை உள்ளது உண்மைதான். நான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிவந்ததன் விளைவாக, புழல் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 10 எம்.எல்.டி. தண்ணீர் வழங்க ஒப்புக்கொண்டனர். இதனால் வரும் ஜூன் அல்லது ஜூலையில் இருந்து குடிநீர் வழங்குவோம். 
மேலும், புழல் ஏரியிலிருந்து தண்ணீர் கிடைக்கும் வரை காத்திராமல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சமும், நகராட்சி நிதியிலிருந்து ரூ.30 லட்சமும் ஒதுக்கீடு செய்து, நாகம்மை நகரில் ராட்சத ஆழ்துளைக் குழாய்கள் அமைத்து, அதில் கிடைக்கும் நீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வழங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, பருத்திப் பட்டு பகுதியில் இதேபோல் தொடங்கவும் ஆய்வு நடைபெற்றுவருகிறது. 
இந்த ஆண்டு இறுதிக்குள் வீடுகளுக்கு குடிநீர் வழங்க முயற்சி எடுத்துவருகிறோம். மேலும், ஆவடி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 5 பெரிய ஏரிகளை ஆழப்படுத்தவும், கரைகளை உயர்த்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் குடிநீர் இணைப்பு வேண்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கட்டிவிட்டு, இதுவரை குடிநீர் வழங்காததால், தற்போது வீடுகளுக்கு தனித் தனியாக குழாய் இணைப்பு கொடுக்க அதற்குரிய கட்டணம் செலுத்த கேட்டால் கட்ட மறுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே அவர்களுக்கு நம்பிக்கை வர, குடிநீர் இணைப்பு கட்டணத்தை நகராட்சியே கட்டிவிட்டு பின்னர் தவணை முறையில் அவர்களிடம் வசூல் செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம். வரும் ஜூலைக்குள் கண்டிப்பாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com