திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுரப் பணிகள் மும்முரம்

திருத்தணி முருகன் கோயிலில், ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள்
திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுரப் பணிகள் மும்முரம்


திருத்தணி முருகன் கோயிலில், ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 
அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், முருகன் கோயிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 18-இல், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்துக்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த, 2011-க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆண்டு, ஏப்ரல்-மே மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் தொடங்கியது. ஆரம்பம் முதல் ராஜகோபுர பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இதுவரை மேற்பகுதியில் இருந்து மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோபுர கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி முடிந்து, தற்போது ராஜகோபுரத்துக்கு வண்ணம் பூசும் பணியும் பொம்மைகள் அமைக்கும் பணியும் துரித கதியில் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை, 4 நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியும், மின் விளக்குகள், இடிதாங்கி கருவி அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து, கோபுரம் அருகில் கல்தரை அமைக்கும் பணி மற்றும் கோபுரம் வழியாக மலைக் கோயிலில் உள்ள தேர் வீதிக்கு பக்தர்கள் செல்வதற்கு படிகள் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில், திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டு, மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத கடைசி வாரம் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com