விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூரில் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், பிரதமரின் மாதந்தோறும் விவசாயிகளுக்கான ஓய்வூதியம்

திருவள்ளூரில் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், பிரதமரின் மாதந்தோறும் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மைத் துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் இணைந்து, பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முகாமில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பங்கேற்று, திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியது:
விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் சார்பில், 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடியும். இதில், 40 வயதைக் கடந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தால் மனைவி, மகன் மற்றும் மகள் பெயரில் இணைந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப ரூ. 55 முதல் ரூ. 200 வரை 60 வயது வரை மாதம்தோறும், 3 மாதம், 6 மாதம், ஒரு வருடமும் தவணைத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் செலுத்தலாம். இதில், 61 வயது முதல் மாதந்தோறும் விவசாயிகளுக்கு ரூ. 3 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மேலும், பயனாளி உயிரிழக்கும் பட்சத்தில் வாரிசுதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும். 
அதேபோல், இதில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தை தொடர பயனாளிக்கு விருப்பம் இல்லையென்றால், செலுத்திய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.  
அதேபோல், பாரதப் பிரதமரின் விவசாயக் கடன் அட்டை திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம். ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தொடர்பு கொண்டு கிஸான் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் என்றார். 
முன்னதாக 6 விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கான ஆவணங்கள் மற்றும் 8 விவசாயிகளுக்கு கடன் அட்டைகளை அவர் வழங்கினார். 
முகாமில், வேளாண் துறை இணை இயக்குநர்(பொ) கோ.பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எம்.தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர் (வேளாண்மை) சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ப.பிரதாப்ராவ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com