தனியார் நிதி நிறுவனம் நடத்தி மகளிர் குழுவிடம் ரூ. 4.50 கோடி மோசடி: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி மகளிர் சுய உதவிக்குழுவிடம் ரூ. 4.50 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவானோர் மீது நடவடிக்கை
தனியார் நிதி நிறுவனம் நடத்தி மகளிர் குழுவிடம் ரூ. 4.50 கோடி மோசடி: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்


திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி மகளிர் சுய உதவிக்குழுவிடம் ரூ. 4.50 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவானோர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர்-ஆவடி சாலையில் கடந்த 30 நாள்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அப்போது, மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன் மற்றும் வியாபாரக் கடன் பெற்றுத் தருவதாகவும், காக்களூர், எடப்பாளையம், ஆவடி சாலையைச் சேர்ந்த உள்ளூர் நபர்கள் முகவர்களாக செயல்பட்டால் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மகளிர் குழுக்களை அணுகி, குறிப்பிட்ட தொகை செலுத்தினால் குழுவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் கடன்,  கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய ஒவ்வொரு மகளிர் குழுவும், முன்பணமாக ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை அந்த நிதி நிறுவனத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இதேபோல், திருவள்ளூர் எடப்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், காக்களூர், தண்ணீர்குளம், ராமாவரம், தொழுவூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 610-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களிடம் இருந்து ரூ. 4.50 கோடி வரை பெற்றுள்ளனர். மேலும்,  மகளிர் உறுப்பினர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, பதிவு செய்யாத காசோலைப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றதாகத் தெரிகிறது.  
இதைத் தொடர்ந்து, குறைந்த வட்டியில் கடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மகளிர் குழுவினர், தனியார் நிதி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். அப்போது, அந்த நிறுவனத்தின் பெயர் பலகை கீழே போடப்பட்ட நிலையில் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்ததில், நிதி நிறுவனத்தை நடத்தியவர்கள் திங்கள்கிழமை இரவு அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனம் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுத்து, தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத்தர வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தனர். ஆனால், அதற்கு போலீஸார் எவ்வித பதிலும் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணத்தை மோசடிக் கும்பலிடம் இருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது எனக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com