பாமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2019 06:20 AM | Last Updated : 04th April 2019 06:20 AM | அ+அ அ- |

பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து எம்.பி. திருத்தணி கோ.அரி, சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் திருத்தணியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திருத்தணி நகராட்சி 3, 4, 5, 6, 7 மற்றும் 8-ஆவது வார்டுகளில் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து, மேட்டுத் தெருவில் உள்ள கடைகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது நகராட்சியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம், புறவழிச் சாலைப்பணியை துரித வேகத்தில் முடிப்போம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தனர்.
இதில், பாமக மாவட்டச் செயலர் மணி, திருத்தணி முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.செளந்தர்ராஜன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் கேபிள் எம்.சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.