வாக்குச் சாவடிகளுக்கு 4,412 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி, பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி, பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படவுள்ள மொத்தம் 4,412 வாக்குப் பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் புதன்கிழமை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:  திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுடன், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை பதிவு எண் அடிப்படையில் வாகனங்களில் ஏற்றப்பட்டன. அதனுடன் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களான பேலட் காகிதச் சுருள், வாக்குப் பதிவு முடிந்தவுடன் "சீல்' வைப்பதற்கான அரக்கு, வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வரிசைக்கான காகிதம் ஒட்டுவதற்கான பசை அடங்கிய பொருள்களும் வாகனங்களில் சரிபார்க்கப்பட்டு ஏற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 
இதில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 4,412 வாக்குப் பதிவு இயந்திரகள், விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்கான பொருள்களைக் கொண்டு செல்வதற்கு, 277 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.        இதேபோல், இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக சேர்த்ததும், அது தொடர்பான தகவல் உடனடியாக மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.   
திருத்தணியில்...
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருத்தணி பேரவைத் தொகுதியில் இருபத்து ஏழு மண்டலங்களில் மொத்தம் 329 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை 
திருத்தணி  கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாகனம் மூலம் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
முன்னதாக, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பவனந்தி தலைமையில், வருவாய்த் துறை ஊழியர்கள் இயந்திரங்களை சரிபார்த்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒதுக்கப்பட்ட வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, வருவாய்த் துறை ஆய்வாளர்  ராஜேந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் மதியழகன் உள்பட வருவாய்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com