ஜாக்டோ-ஜியோ போராட்டம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை
By DIN | Published On : 15th February 2019 07:51 AM | Last Updated : 15th February 2019 07:51 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் உத்தரவை ரத்து செய்து பணியில் சேருவதற்கான ஆணைகளை கல்வித் துறை வியாழக்கிழமை வழங்கியது. இதற்காக தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி 22 முதல் வேலைநிறுத்தம் செய்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் ஞானசேகரன், கதிரவன், பாஸ்கர் செளத்ரி, முருகன் உள்பட 7 பேரை கைது செய்ததோடு பணியிடை நீக்கமும் செய்தது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு, அவர்களை மீண்டும் பணியில் சேர உத்தரவிட்டது. இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்வதற்கான ஆணையை வழங்கினார். ஆணை பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் அவரவர் பள்ளிக்கு பணிக்கு திரும்பினர்.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் கூறுகையில், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ததற்கும், ஜாக்டோ-ஜியோவின் 9 அம்ச கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பழைய இடத்திலேயே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.