கிருஷ்ணா குடிநீர்த் திட்ட கால்வாயில் தூர்வாரும் பணி மும்முரம்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா குடிநீர்த் திட்ட கால்வாயில் பருவமழைக் காலங்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் சிமெண்ட் தடுப்புப் பகுதிகளை சேதப்படுத்தும்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா குடிநீர்த் திட்ட கால்வாயில் பருவமழைக் காலங்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் சிமெண்ட் தடுப்புப் பகுதிகளை சேதப்படுத்தும் முள்செடிகள், மரங்கள் மற்றும் அடிப்பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை மேற்கொள்ள ரூ.39.8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் கடந்த 1983-இல் கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கி.மீ. தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தக் கால்வாய் ஆந்திரத்தில் 152 கி.மீ. நீளமும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது.
 குடிநீர் கொண்டு வருவதற்கான கிருஷ்ணா கால்வாய் வெட்டும் பணிகள் 1984-இல் தொடங்கி, 1995-இல் முடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 1996- முதல், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு இரு முறை வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கண்டலேறு அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டம் மூலம் ஜனவரியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
 இந்த நிலையில் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கும் செல்லும் கிருஷ்ணா கால்வாயானது, நீர் வரத்தின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. அத்துடன், இந்தக் கால்வாயில் ஆங்காங்கே மண் அரிப்பை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. அடிப்பகுதியில் மணல் மேவியும் காணப்படுகிறது. தடையில்லாமல் தண்ணீர் செல்லும் வகையில் சிமெண்ட் சிலாப்கள் பதிக்கவும், இடையிடையே உள்ள நடைபாலத்தைப் புதுப்பிக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 மழை பெய்தால் நீர் தங்குதடையின்றி பூண்டி ஏரியிலிருந்து செங்குன்றம் ஏரிக்கு சென்றடைய வேண்டும். இதற்காக பூண்டி ஏரியில் இருந்து சிறுகடல் பகுதியில் இருந்து ஊத்தோடை வழியாக செங்குன்றம் ஏரி வரையில் செல்லும் கால்வாய் 21.50 கி.மீ நீளம் கொண்டதாகும். இந்தக் கால்வாயின் கரையோரங்களில் சிமெண்ட் கற்கள் பதித்துள்ள இடங்களில் மரம் மற்றும் முட்செட்டிகள் முளைத்துள்ளதாலும், தண்ணீர் எளிதாகச் செல்லும் வகையில் அடிமட்டப்பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றவும் ரூ.39.08 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 தற்போது, இப்பகுதியில் இருந்து செங்குன்றம் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் பொக்லைன் வாகன உதவியுடன் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு கரையோரங்களில் மரங்கள், முட்செடிகள் ஆகியவற்றையும், கால்வாயில் அடிமட்டத்தில் தேங்கியுள்ள வண்டல் மண்ணையும் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com