வீட்டுவரி உயர்வு:பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வீடுகளுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் வீட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளதாகவும், இதைக் குறைக்க


கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வீடுகளுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் வீட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளதாகவும், இதைக் குறைக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விதிகளுக்கு உள்பட்டு, வீடுகளுக்கு தகுந்தவாறு இந்த ஆண்டு கூடுதலாக வரி அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பேரூராட்சி  ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்து வீடுகளுக்குத் தகுந்தவாறு வரிகளை விதித்தனர்.
இந்நிலையில், பேரூராட்சி ஊழியர்கள் சரியாக ஆய்வு செய்யாமல், சிறிய வீடுகளுக்கு அதிக வரியை விதித்துள்ளதாகவும், இந்த வரி உயர்வை ரத்து செய்யக்கோரியும் சமூக ஆர்வலர்கள் வேந்தன், வேலு ஆகியோர் தலைமையில்  50-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியது: அரசு விதிமுறைகளுக்கு ஏற்பவே வீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டது.
இதில், கணினி தவறு காரணமாக சில வீடுகளுக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனே நீக்கப்பட்டு விட்டது. கும்மிடிப்பூண்டி மேட்டுத் தெருவில் உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டுப் பகுதியை பலப்படுத்திய பின்னர் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவே ஒருவேளை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com