"அரசின் சலுகைகளை மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் போன்ற முன்னுரிமை உடையோர் அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் போன்ற முன்னுரிமை உடையோர் அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன்வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னுரிமை உடையோருக்கான வழிகாட்டுதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
முகாமில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்துப் பேசியது: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், விருப்பம் உள்ளவர்களுக்கு தகுந்த துறையில் தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதரவற்ற விதவைகளுக்கு அரசுப் பணிகளில் உள்ள இட ஒதுக்கீடு மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். அதேபோல் முன்னுரிமை பிரிவைச் சார்ந்தோருக்கு மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 
இது தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசு துறைகளை அணுகி தேவையான விவரங்களைப் பெறலாம்.
 அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற காலி இடங்களில் பரிந்துரைக்கப்படும்போது ஒரு காலிப் பணி இடத்துக்கு 5 பேரில் ஒரு மாற்றுத் திறனாளிக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு செய்து பரிந்துரை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.  
 இந்த ஆண்டு முதல் 90 கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கும், இதர மாற்றுத்திறனாளிகள் 1,112 பேருக்கும் ரூ. 26.64 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஆதரவற்ற விதவைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) சாந்தி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் பி.ஆனந்தன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் சசிதரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com