ஆட்சியர் அலுவலகம் முன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30,000 பழங்குடியினக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30,000 பழங்குடியினக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தரக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் பழங்குடி இனத்தை சேர்ந்த 30,000 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஏரி, குளம், ஆறு ஆகியவற்றின் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். வாய்ப்புள்ள இடங்களில் தாங்கள் வசிப்பதற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடங்களில் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பழங்குடியினர் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு இப்பிரிவினர் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியும் பலனில்லை என்று கூறப்படுகிறது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்து ஓராண்டாகியும் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குறைகூறுகின்றனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பழங்குடியின நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தாழவேடு, புலிகுண்டா, காஞ்சிப்பாடி, பாரிவாக்கம், நெமிலிச்சேரி, ஏகாட்டூர், விளாப்பாக்கம், திருக்கண்டலம், எஸ்.வி.ஜி.புரம் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் இருந்து 500 பேர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டனர். வீட்டு மனைப் பட்டா, இனச் சான்றிதழ், மத்திய மைய நிதியிலிருந்து தொகுப்பு வீடுகள், கறவை மாடு, மானியத்துடன் தொழில் கடன்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, ஆதிவாசிகள் தேசிய மேடை அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட துணை நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வஜ்ஜிரவேலு, கணேசன், மணிகண்டன்,  விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், முன்னாள் தலைவர் கே.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் ஆகியோர் பேசினர்.
அதைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அவர்கள் வழங்கினர். 
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கூறுகையில் "பழங்குடியினர் தொடர்பாக கணக்கெடுத்து அடுத்த ஒரு மாதத்துக்குள் குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முகாம் நடத்தி இனச் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார். 
"கொண்டாரெட்டி பிரிவினருக்கான எஸ்.டி. சான்றிதழ் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தால், அதை மையப்படுத்தி குடும்பத்தினருக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்' என மலைவாழ் சங்கத்தினர் கோரிக்கை வைத்தபோது, "அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஆட்சியர் கூறினார். 
மேலும் பூந்தமல்லி பகுதியில் உள்ளவர்களுக்கு திருவள்ளூரில் மாற்று இடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com