ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் அருகே துப்புரவுத் தொழிலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து

திருவள்ளூர் அருகே துப்புரவுத் தொழிலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் தேவதாஸ் (45).  அவர்  பேரம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் மாட்டு வண்டி மூலம் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவரது மாட்டு வண்டி மீது மோதியது. இதை தேவதாஸ் தட்டிக் கேட்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தேவதாஸைத் தாக்கினர். 
இது தொடர்பாக தேவதாஸ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் பேரம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து தகவலறிந்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவதனம் விரைந்து வந்து துப்புரவுத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தேவதாஸைத் தாக்கிய நபர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com