வறண்டு கிடக்கும் ஏரியை தூர்வாரக் கோரிக்கை

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை காரணமாக வறண்டு கிடக்கும் திருநிலை ஏரியைத் தூர்வாரி சீரமைக்க
வறண்டு கிடக்கும் ஏரியை தூர்வாரக் கோரிக்கை

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை காரணமாக வறண்டு கிடக்கும் திருநிலை ஏரியைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருநிலை ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதி இல்லாமல் மணல் மற்றும் மண் எடுக்கப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது. மேலும் கரை இல்லாத பகுதிகளான பெருங்காவூர், மேட்டுக் காலனி பகுதிகளில் 10 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
இந்த ஏரி மழைக்காலங்களில் நிரம்பியபோது அதன் நீரைக் கொண்டு திருநிலை, திருநிலை காலனி, கோயில்மேடு, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 150 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், கடும் வெயில் காரணமாக தற்போது இந்த ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரிக்கு மழை நீர் வரக்கூடிய கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, திருநிலை ஏரி மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இப்பகுதியில் இரவு நேரங்களில் சிலர் மணல் எடுப்பதைத் தடுக்கவும் பொதுப் பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதேபோல், திருநிலை, கொடிப்பள்ளம், அருமந்தை, பெருங்காவூர், பூதூர், சோழவரம், ஆத்தூர், காரனோடை, நாரணம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்களும் வறண்டுள்ளன. எனவே, இந்தக் குளங்களைத் தூர்வாரி கரைகளை சீரமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்பதால் உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com