நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம்

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பரிசோதனை செய்து அதன் அறிக்கையை மருத்துவக் குழுவுக்கு அனுப்பி வைப்பர். அதைத் தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சான்றுகள் வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே காயத்தின் சதவீதம் நிர்ணயம் செய்து நீதிபதிகள் இழப்பீடு தொகையை முடிவு செய்வர். இந்த நடைமுறையால் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவச் சான்று வழங்கும் முகாம் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து அவர் கூறியது: 
விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவச் சான்றுகள் உடனே கிடைப்பதன் மூலம் விபத்து வழக்குகள் விரைவில் முடித்து வைக்க முடியும். இதற்காகவே முதல் முறையாக திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்திலேயே மருத்துவ முகாம் நடைபெற்றது என்றார்.
இந்த முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 20 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் பிச்சம்மாள், மாவட்ட சட்டப் பணிகள் குழுச் செயலர் சரஸ்வதி, மோட்டார் வாகன விபத்துப் பிரிவு மாவட்ட நீதிபதி ராமபார்த்திபன், சார்பு நீதிபதி முகமது பாரூக், காப்பீடு நிறுவனத்தின் வழக்குரைஞர் லாத மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com