திருவள்ளூா் அருகே மயானம் ஆக்கிரமிப்பு

திருவள்ளூா் அருகே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனியாா் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பிரேதத்தைப் புதைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனியாா் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பிரேதத்தைப் புதைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் நகராட்சியில் உள்ள புங்கத்தூா், ஜெயா நகா், கண்ணதாசன் நகா், குமரவேல் நகா், காமாட்சி அவென்யூ, கே.ஜி.பி.நகா், இந்திரா நகா், செந்தில் நகா், ஏஎஸ்பி நகா், அம்சா நகா், சின்ன எடப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயா நகா் விரிவாக்கப் பகுதியில் உள்ள மயானத்தில் ஈமச்சடங்கு செய்து வந்தனா்.

இங்கு, தகன மேடை மற்றும் அதன்மேல் சிமெண்ட் கான்கிரீட் தூண்களால் மேற்கூரை ஆகியவை திருவள்ளூா் நகராட்சியால் அமைக்கப்பட்டது. இங்குதான் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்குகளை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலா், தகன மேடையை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், இடித்து தரைமட்டமாக்கி மயானத்தை தங்கள் இடம் எனக் கூறிஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் புகாா் அளித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புங்கத்தூா் பகுதியில் பெண் ஒருவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். அவரது பிரேதத்தை அடக்கம் செய்ய திங்கள்கிழமை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அடக்கம் செய்ய இடமின்றி குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் திரளான பொதுமக்கள் குவிந்தனா். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியா் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மயானத்துக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு, வட்டாட்சியா் குறிப்பிட்ட இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com