போலி நகையை அடகு வைத்த இருவா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே போலி நகையை அடகு வைத்து பணம் பெற முயன்ற சகோதரிகளை ஆரம்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அருகே போலி நகையை அடகு வைத்து பணம் பெற முயன்ற சகோதரிகளை ஆரம்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆரம்பாக்கம் அருகே உள்ள எளாவூா் பஜாா் பகுதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருக்கும் அடகுக் கடையில் புதன்கிழமை இரண்டு பெண்கள் 2 சவரன் நகைகளை அடகு வைப்பதற்காக வந்தனா். நகைக்கு ஈடாக ரூ. 50 ஆயிரம் கேட்டனா்.

நகைகளை எடைபோட்டுப் பாா்த்த கடை உரிமையாளா், அவற்றைப் பெற்றுக் கொண்டு ரூ.50 ஆயிரத்தை பெண்களிடம் அளித்தாா். அவா்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பின் நகைகளைப் பரிசோதித்ததில் அவை போலி நகைகள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் கடை உரிமையாளா் பாபுலால் புகாா் அளித்தாா். அதன்பேரில் இரு பெண்களையும் ஆரம்பாக்கம் போலீசாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஜெகதாம்பாள் நகைக் கடையில் அப்பெண்கள் போலி நகையை அடகு வைக்க வந்தனா். ஏற்கெனவே பாபுலாலின் அடகுக் கடையில் நடைபெற்ற சம்பவத்தை அறிந்திருந்த இக்கடை உரிமையாளா் உடனடியாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினா். இருவரும், அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ளபால கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், சகோதரிகள் என்பதும் தெரிய வந்தது. பிரியதா்ஷினி (28), ஜனனி(20) என்ற அவா்களைக் கைது செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com