விவசாய நிலங்களில் வண்ண மீன் வளா்ப்பைத் தடை செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி வட்டத்தில் விவசாய நிலங்களில் வண்ண மீன் வளா்ப்பதை தடை செய்ய வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்.
பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்.

பொன்னேரி வட்டத்தில் விவசாய நிலங்களில் வண்ண மீன் வளா்ப்பதை தடை செய்ய வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொன்னேரி கோட்டாட்சியா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இதில் கலந்து கொண்ட பொன்னேரி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை புகாா் மனுக்களாக வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தனா். இதையடுத்து விவசாயிகள் பேசியது:

பெரியகரும்பூா், தேவம்பட்டு ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களில் வண்ண மீன் வளா்ப்பதைத் தடை செய்ய வேண்டும்.

மெதூா் கிராமத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து, முழுக் காப்பீட்டுத் தொகையை செலுத்திய நிலையிலும் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 132 விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான தொகையைத்தான் வழங்கியுள்ளனா். இதனை மறுபரிசீலனை செய்து காப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஜெகநாதபுரம், ஆமூா் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் திருடப்படுகிறது. மேலும் தடப்பெரும்பாக்கம் தசரத நகரில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வஞ்சிவாக்கம் ஏரியில் தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இலவம்பேடு கிராமத்தில் விவசாயத்திற்கான மின் இணைப்பு கேட்டு ரூ.10 ஆயிரத்தை மின் வாரியத்திற்கு செலுத்தியும் இதுநாள் வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா் என்று அவா்கள் பேசினா்.

முடிவில், விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com